பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை:

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் 29 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று (வியாழக்கிழமை) விண்ணில் பாய்கிறது.

கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருக்கிறது. இதைத்தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடைகொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இறுதிக்கட்ட பணியான 29 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பகல் 2 மணிக்கு தொடங்கியது. இது இன்று இரவு 7 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. தற்போது ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் இறுதிக்கட்ட செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதன் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். 320 டன் எடையும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் உயரத்திலும், அதிகபட்சமாக 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டர் உயரத்திலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com