புதிய உலக சாதனை புகழ்பெற்ற வைரம் ஒன்று 7 கோடி டாலர்க்கு ஏலம்

புகழ்பெற்ற இளஞ்சிவப்பு வைரம் ஒன்று 7 கோடி டாலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களுக்கிடையே வைரத்தின் மீதான மோகம் என்றுமே தீராது. அதுவும் குறிப்பாக நீலம், சிவப்பு, இளஞ்சிவப்பு நிற வைரக் கற்களை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இளஞ்சிவப்பு வைரம் ஒன்று 7 கோடி டாலர் தொகைக்கு ஏலம் விடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இதுபோன்ற இளஞ்சிவப்பு வைரக் கற்கள் ‘plastic deformation’ என்ற முறையில் வைரக் கற்கள் மீது அதிகப்படியான அழுத்தங்கள் கொடுத்து அதன் கற்களின் படிம அமைப்பை மாற்றி இளஞ்சிவப்பு நிறத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

ஹாங்காங்கைச் சேர்ந்த சோத்பி புகழ்பெற்ற நிறுவனம் கலைப் படைப்புகள், பழங்கால வைரங்கள் உள்ளிட்டவற்றை ஏலத்தில் விற்பனை செய்துவருகிறது. இந்நிலையில், இந்நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடத்திய ஏலத்தில், 59.6 கேரட் அளவிலான அரியவகை இளஞ்சிவப்பு நிற வைரம் ஏலம் விடப்பட்டது. இதைக் கைப்பற்ற நிலவிய கடும் போட்டிக்கிடையே, ஹாங்காங்கைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் 71.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (7.12 கோடி டாலர்) ஏலம் எடுத்தார். இதைத்தொடர்ந்து, உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நீலநிற வைரம் ஒன்று கடந்த மே மாதம் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது அந்த வைரம் 57.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author