பெங்களூருவில் வங்கிப் பணத்துடன் தலைமறைவான வேன் ஓட்டுநர் கைது

பெங்களூருவில் ரூ.92 லட்சம் வங்கிப் பணத்துடன் தலைமறைவான வேன் ஓட்டுநர் டொம்னிக் செல்வராஜை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள‌ லிங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் டோம்னிக். இவர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம் மையங்க‌ளுக்கு பணம் கொண்டு செல்லும் தனியார் நிறுவனத்தின் வேனின் ஒட்டுநராகப் பணியாற்றினார்.

கடந்த நவம்பர் 23-ம் தேதி கெம்பே கவுடா சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு ரூ.1.37 கோடி பணத்துடன் சென்றார்.

அப்போது பாதுகாவலர்கள் வங்கிக் கிளைக்குள் சென்றிருந்தபோது, தனியாக இருந்த டோம்னிக் பணம் இருந்த வேனை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.

வங்கி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வசந்த நகரில் உள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியின் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சோதித்த போது, வேனில் ரூ.45 லட்சமும் துப்பாக்கியும் மட்டுமே இருந்தன.

இந்நிலையில், பணத்தை எடுத்துச்சென்ற ஓட்டுநர் டொம்னிக் செல்வராஜை இன்று காலை பெங்களூரு மேற்கு சரக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை.

வேன் ஓட்டுநரின் மனைவி ஈவ்லின் ராய் திங்கட்கிழமை ரூ. 79 லட்சத்தோடு போலீசாரிடம் சரணடைந்த ஒரே நாளில் டொமினிக் கைதும் நிகழ்ந்துள்ளது.

டொம்னிக் கைதானது எப்படி?

டொம்னிக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். டொம்னிக் தொடர்பு கொண்டால் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கும்படியும் உறவினர்களிடம் கூறியிருந்தனர்.

போலீஸ் எச்சரிக்கை குறித்து அறிந்திராத டொம்னிக் அவரது நண்பரிடம் உதவி கோரியுள்ளார். டொம்னிக், தன்னிடம் பேசியது குறித்து அந்த நண்பர் போலீஸுக்கு உடனடியாக தகவல் கொடுத்திருக்கிறார்.

காவல்துறையின் அறிவுரையின்படி, டொம்னிக்கின் நண்பர் அவரை கே.ஆர்.புரத்தில் உள்ள டின் ஃபேக்டரிக்கு வருமாறு கூறியிருக்கிறார்.

டொம்னிக் அந்த இடத்துக்கு வந்தவுடன், சாதாரண உடையில் இருந்த காவல் அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை.

சேலத்துக்கு விரைந்த போலீஸ்:

சேலத்தில் உள்ள டொம்னிக்கின் உறவினர்களில் ஒருவரிடம் பணம் இருக்கக்கூடும் என்று போலீசார், சந்தேகிக்கின்றனர். இதை விசாரிக்க அதிகாரிகள் குழு சேலத்துக்கு விரைந்துள்ளது. காவல்துறையினர் டொம்னிக் மற்றும் அவரின் மனைவியை விசாரித்து வருகின்றனர்.

You might also like More from author