Home இந்தியா பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் முறை தொடரும்: தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் முறை தொடரும்: தர்மேந்திர பிரதான்

14
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது மந்திரி சபையை மாற்றியமைத்தார். இதில், மத்திய பெட்ரோலிய துறை ராஜாங்க மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதானுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதேபோல்,திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட தர்மேந்திர பிரதான் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் நடைமுறை ரத்து செய்யப்படாது என்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ நுகர்வோர் நலனுக்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.  எனவே இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று கருதவில்லை” என்றார்.

பெட்ரோல்,டீசல் விலையை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தினமும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த ஜுன் மாதம் முதல் கடைபிடிக்கப்படுகிறது. முதல் 15 தினங்களுக்கு விலை குறைந்து வந்த நிலையில், பிறகு தினமும் பெட்ரோல் விலை ஏறுமுகமாகவே உள்ளது.

கடந்த 2 மாதங்களில் ரூ.6.6 என்ற அளவுக்கு பெட்ரோல் விலை ஏறியுள்ளது. இதன்காரணமாக இந்த முறை மாற்றியமைக்கப்படுமா? என்று பேசப்பட்டு வந்த நிலையில், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.