Dec 10, 2016
29 Views
0 0

மதுரவாயல் பறக்கும் சாலை பணிகளை அதிமுக அரசு வரவேற்கத்தக்கது-ஸ்டாலின்

Written by
banner

சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப் பணிகளை, தொடர்ந்து மேற்கொள்ள புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் திரு ஒ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அதிமுக அரசு முடிவு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி, சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக திராவிட முன்னேற்ற கழக அரசு இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் இந்த திட்டத்தை உருவாக்கினார்.

1,815 கோடி ரூபாய் மதிப்பில், 19 கிலோமீட்டர் தொலைவிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு 08.01.2009 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் அடிக்கல் நாட்டினார்கள். மத்திய – மாநில அரசுகள் மற்றும் சென்னை துறைமுகம் இணைந்து நிறைவேற்றும் இத்திட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மற்றும் மாநில அரசின் எட்டு துறைகள், கழக ஆட்சி இருந்த போது தாமதமின்றி அனுமதியளித்தன என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பறக்கும் சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு மொத்தம் உள்ள 889 தூண்களில், கழக ஆட்சி இருந்த போதே 120 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. 1,815 கோடி ரூபாயில் ஏறக்குறைய 500 கோடி ரூபாய் செலவழித்து 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் வேகமாக நடைபெற்றன.

இந்நிலையில் 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்த பறக்கும் சாலைத் திட்டத்திற்கு திடீரென்று முட்டுக்கட்டை போட்டது. “பணிகளை நிறுத்துங்கள்”, என்று 01.02.2012 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அது மட்டுமின்றி 29.03.2012 அன்று இன்னொரு கடிதம் எழுதி, “பணிகளை நிறுத்தாவிட்டால் திட்டப்பணிகள் நடக்கும் இடத்தில் உள்ள இயந்திரங்களை பறிமுதல் செய்வோம்”, என்று மத்திய அரசு நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை எச்சரித்தது.

இந்த திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், ”திட்டப்பணிகளை கண்காணிக்க, கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவைக் கூட்டுங்கள், பேச்சுவார்த்தை நடத்துவோம்”, என்று அதிமுக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதோடு உயர்மட்டக் குழு கூட்டம் கடைசி வரை கூட்டப்படவே இல்லை. அதிமுக ஆட்சியில் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய மாநில அரசின் 8 துறைகளும் “ஒத்துழையாமை இயக்கம்” நடத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை திணற வைத்தன.

பறக்கும் சாலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரதமரின் ஆலோசகரே 09.11.2012 அன்று நேரடியாக சென்னை வந்து தலைமைச் செயலாளரை சந்தித்தார். “திட்டப் பணிகள் நிறைவேற்றுவதற்கு அனுமதி கொடுங்கள்”, என்று வேண்டுகோள் விடுத்தபோதும் கூட அதிமுக அரசு அதுபற்றி அக்கறை காட்டவில்லை. திட்டத்தை நிறைவேற்ற முன்வரவும் இல்லை.

இதனால் வேறு வழியின்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் “பறக்கும் சாலைத் திட்டப் பணிகளை நிறுத்துவதற்கு அதிமுக அரசு கொடுத்த பணி நிறுத்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியது. அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் அதிமுக அரசின் முடிவை ரத்து செய்ததோடு மட்டுமின்றி, பறக்கும் சாலைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு 20.02.2014 அன்று தீர்ப்பளித்தது.

ஆனால் அதிமுக அரசோ இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மதுரவாயல் – துறைமுகம் இடையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்தவே விடக்கூடாது என்பதில் ஆறு வருடமாக “நிர்வாக அராஜகம்” செய்தது. இதற்கிடையில் அந்த திட்டப் பணிகளைச் செய்த நிறுவனம், அதிமுக அரசிடம் 1,200 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்த சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தன.

தி.மு.கழக அரசில் கொண்டு வரப்பட்ட மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து நெருக்கடி நீங்கும். மதுராவயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வருவதற்கு 1 முதல் 2 மணி நேரம் ஆகும் நிலையில், இத்திட்டம் முன்பே நிறைவேறியிருந்தால் 15 முதல் 20 நிமிடத்திற்குள் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வாகனங்கள் வந்து சேர்ந்து விட முடியும். கண்டெயினர்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் பறக்கும் சாலையில் செல்லும் என்பதால் விபத்துக்கள் பெருமளவில் குறையும். மக்கள் செல்லும் சாலைகளில் வாகனங்களின் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறையும். இவை எல்லாவற்றையும் விட இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை துறைமுகத்தை நம்பியுள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக இருக்கும். உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் இத்திட்டத்தால் மாநிலத்தின் வர்த்தகம் பெருமளவு அதிகரிக்கும்.

இத்தனை நன்மைகளுடன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதி திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் துவங்கப்பட்ட பறக்கும் சாலைத் திட்டத்தை ஆறு வருடங்கள் கிடப்பில் போட்டு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் அதிமுக அரசு பெரும் தீங்கு விளைவித்திருக்கிறது. இந்த அடாவடிச் செயலுக்காக பொதுமக்களிடத்தில் அதிமுக அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு அராஜகம் செய்து விட்டு, இப்போது இத்திட்டத்தை நிறைவேற்ற முன் வந்திருப்பது “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்வது போல் உள்ளது, என்றாலும், இனியாவது பறக்கும் சாலை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெருக்கடிகளை தீர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கு வித்திடவும் எவ்வித தயக்கமும் இன்றி அதிமுக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Article Categories:
அரசியல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *