மத்திய பட்ஜெட் 2017 – 18: சிறப்பு அம்சங்கள்

New Delhi: Finance Minister Arun Jaitley tabling the Union Budget for 2017-18 in the Parliament in New Delhi on Wednesday. PTI Photo/TV Grab (PTI2_1_2017_000018B)

தற்போதைய சர்வதேச சூழலிலும் இந்தியாவுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வளர்ச்சியின் பலன் இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. சர்வதேச ஜிடிபி வளர்ச்சி 3.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது. கடந்த ஒர் ஆண்டில் செய்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளால் உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். கச்சா எண்ணேய் விலை உயர்வு, டாலர் மதிப்பு வலுவடைந்து வருவது மற்றும் கமாடிட்டி சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவது இந்திய பொருளாதாரத்துக்கு பாதகமான அம்சமாகும். பண மதிப்பு நீக்கம் துணிச்சலான நடவடிக்கை ஆகும். பண மதிப்பு நீக்கம் காரணமாக குறுகிய கால அளவில் மட்டும் பாதிப்புகள் இருக்கும். மகாத்மா காந்தி குறிப்பிட்டதைப் போல நல்ல நோக்கத்துக்காக செய்யப்பட்ட செயல் தோல்வி அடையாது. சந்தையில் பணப்புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. பண மதிப்பு நீக்கத்தின் பாதிப்பு அடுத்த ஆண்டு வரை இருக்காது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சம்பந்தபட்ட துறைகளுக்கு கால அவகாசம் கிடைக்கும். மாற்றம், வலிமை மற்றும் தூய்மையே இந்த பட்ஜெட்டின் திட்டமாகும்.

* கிராமப்புற பகுதிகள், கட்டுமானம், வறுமையை ஒழித்தல் ஆகிய துறைகளில் நிதி கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

* விவசாய துறை 4.6 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடையும். விவசாயத்துக்காக ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

* அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 36,100 கோடி டாலர் அளவில் இருக்கிறது. அடுத்த 12 மாதங்களுக்கு இது போதுமானது.

* இதுவரை இல்லாத அளவுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24% உயர்வாகும்.

* 2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள்.

* ஆர்சனிக் மற்றும் புளுரைடால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

* பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின் கீழ் ஒரு நாளுக்கு 133 கீமி சாலை அமைக்கப்படுகிறது. 2011-14 காலகட்டத்தில் 73 கீமி மட்டுமே அமைக்கப்பட்டது.

* மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில் அவர்களது உடல்நலம் குறித்த விவரங்கள் விரைவில் இடம்பெரும்.

* ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

* 3,500 கீமி தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

* ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து.

* அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயில் ரயில் பாதுகாப்பு நிதி அமைக்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் 500 ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்படும்.

* புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது.

* உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஒடிஷா மற்றும் ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

* டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட ‘பிம்’ செயலியை 1.25 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

* வணிகர்களுக்கான ‘ஆதார் பே’ செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

* நாட்டை விட்டு வெளியேறிய பொருளாதார குற்றவாளின் சொத்துகளை ஜப்தி செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

* பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஆகும்.

* அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.2%. 2018-19 உள்ளிட்ட அடுத்த 3 நிதி ஆண்டுக்கு நிதிப் பற்றாக்குறை இலக்கு 3%.

* வரி ஜிடிபி விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது. வரி செலுத்தாத சமூகமாக இருப்பதால், நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு அதிக சுமையாக இருக்கிறது.

* 2015-16-ம் நிதி ஆண்டில் 3.7 கோடி நபர்கள் வரி செலுத்தி இருக்கின்றனர். இதில் 24 லட்சம் நபர்கள் மட்டும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

* 2015-16-ம் நிதி ஆண்டில் 76 லட்சம் பேர் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதில் 56 லட்சம் பேர் மாத சம்பளம் பெருபவர்கள்.

* ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 25 சதவீத வரி செலுத்தினால் போதும். முன்பு இந்த வரி விகிதம் 30 சதவீதமாக இருந்தது.

* 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.

* அரசியல் கட்சிகள் ரொக்கமாக ரூ.2,000 மட்டுமே நன்கொடை வாங்க முடியும்.

* அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடைகளை பெறலாம்.

* அரசியல் கட்சிகள் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு ஏற்ப ரிசர்வ் வங்கி சட்டத்திருத்தம் கொண்டு வர உள்ளது.

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரி செலுத்தினால் போதும். முன்பு இந்த வரி 10 சதவீதமாக இருந்தது.

* ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் வருமானம் இருப்பவர்கள் 10 சதவீத சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.

* 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் 15 சதவீத சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.

* அடுத்த நிதி ஆண்டில் உணவு மானியம் ரூ.1.45 லட்சம் கோடியாக இருக்கும். நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.35 லட்சம் கோடியாக இருக்கிறது.

* அடுத்த நிதி ஆண்டில் எரிபொருள் மானியம் ரூ25,000 கோடியாக இருக்கும்.

* அடுத்த நிதி ஆண்டில் உரமானியத்துக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அடுத்த நிதி ஆண்டில் சுகாதார துறைக்கு ரூ.48,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

You might also like More from author