Home இந்தியா மராத்தா சமுதாயத்தினர் பிரமாண்ட பேரணி

மராத்தா சமுதாயத்தினர் பிரமாண்ட பேரணி

16

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமுதாயத்தினர் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுகேட்டு வருகிறார்கள்.

இதற்காக மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினர் பிரமாண்டமான முறையில் அமைதி பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
அகமத்நகர் மாவட்டம் கோபர்டியில் மராத்தா சமூகத்தை சேர்ந்த சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தி வருகின்றனர்.

மராத்தா சமூகத்தினர் கடந்த ஆண்டு நவிமும்பை, நாசிக், புனே உள்ளிட்ட பல பகுதிகளில் பெரியளவில் அமைதி பேரணி நடத்தினார்கள். அந்த பேரணிகளில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதால், அது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மும்பையில் பிரமாண்ட பேரணி நடத்த அழைப்பு விடுத்து இருந்தனர். பேரணியில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் இருந்து அந்த சமுதாய மக்கள் நேற்று முன்தினம் இருந்தே மும்பையில் குவிய தொடங்கினார்கள்.
ராய்காட், தானே மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மின்சார ரெயில்களில் நேற்று காலை மும்பை வந்து சேர்ந்தார்கள். இதனால், காலை 9 மணிக்கு எல்லாம் பைகுல்லா ராணி பார்க் பகுதி மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது.
பின்னர் அங்கிருந்து கைகளில் காவி கொடியை ஏந்தியபடி பேரணியாக ஆசாத் மைதானத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர். இந்த பிரமாண்ட பேரணி மதியம் ஆசாத் மைதானத்தை சென்றடைந்தது.

அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த பேரணியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மக்கள் வெள்ளத்தை திரட்டி அவர்கள் தங்களது பலத்தை அரசு கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மராத்தா சமூக பிரதிநிதிகள் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

மராத்தா சமூகத்தினரின் பேரணியையொட்டி நேற்று தாதர் தீயணைப்பு படை அலுவலகத்தில் இருந்து ஜே.ஜே. மேம்பாலம் வரை செல்லும் டாக்டர் அம்பேத்கர் சாலை, ஹஜ்ரிமால் சாலையில் ஓ.சி.எஸ். ரோடு முதல் சி.எஸ்.டி. சந்திப்பு வரையிலும், மகாநகர் பாலிகா ரோட்டில் உள்ள மெட்ரோ ஜங்ஷனில் இருந்து சி.எஸ்.டி.க்கும், பாட்டியா பாக்கில் இருந்து வலது புறமாக சி.எஸ்.டி. வரும் சாலையிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேவேளையில் பேரணியால் மும்பை கிழக்கு விரைவு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தென் மும்பையை பொறுத்தமட்டில் திரும்பிய பக்கம் எல்லாம், காவி நிற தொப்பி அணிந்திருந்த மராத்தா சமூக மக்களாகவே தென்பட்டனர். இதனால், தென்மும்பையே ஸ்தம்பித்தது.

மராத்தா சமூகத்தினரின் பேரணி காரணமாக நேற்று தென் மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. மேலும் புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று ஒரு நாள் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டது.
பேரணி சென்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மும்பை நகரில் நேற்று இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.
லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணியை போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்தனர்.

இதனிடையே, பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, ஜிஜாமாதா உதயன் பகுதியில் சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மராத்தா சமூகத்தினர், தங்களுக்கு அரசியல் தலையீடு தேவையில்லை என்று கூறி, அந்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.

இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.