மாணவி அனிதா தற்கொலை குறித்து விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

கோவை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மருத்துவ படிப்பு கிடைக்காத நிலையில் விவசாய படிப்பை தேர்வு செய்ய போவதாக மாணவி கூறியிருந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்பதை எப்படி நம்புவது?

அவர் தானாகவே தற்கொலை முடிவு எடுத்தாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? அல்லது வேறு நவீனமான முறையில் கொலை செய்யப்பட்டாரா? என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த மர்ம முடிச்சுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும். தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாணவி தற்கொலையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகளை குற்றவாளி கூண்டில் நிறுத்த பார்க்கிறார்கள். இதை அனுமதிக்க கூடாது

அவ்வாறு அனுமதித்தால் இந்த நிலை இந்தியா முழுவதும் பரவும் நிலை ஏற்படும். எனவே மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்காக உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும்.

அனிதாவை டெல்லிக்கு அழைத்து சென்றது யார்? எங்கு தங்க வைத்தார்கள் என்பது உள்பட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அவரை அழைத்து சென்ற கஜேந்திர பாபு, சிவசங்கரன் ஆகியோரின் பங்கு குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதற்காக விசாரணை ஆணையம் அமைக்க முதல்-அமைச்சரை ஓரிரு நாளில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

இதே போல் உள்துறை மந்திரியையும் சந்தித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த உள்ளேன்.

நான் பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக செயல்படுவதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. அவர் நன்றி மறந்து பேசுகிறார். நீட்டுக்கு எதிராக குரல் எழுப்பும் கனிமொழி, நாடாளுமன்றத்தில் நீட்டை எதிர்த்து என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும்.

அப்பாவி மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது அதை எதிர்த்து கொந்தளிக்காமல் இப்போது போராட்டம் நடத்துவது ஏன்? அடுத்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தற்போது போராடுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like More from author