மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற டெமி லெய்ஹ் நெல் பீட்டர்ஸ் (வயது 22) பிரபஞ்ச அழகியாக முடி சூட்டப்பட்டார்.

பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றான கேள்வி பதில் சுற்றில், “உங்களிடம் உள்ள பண்புகளிலேயே எது உங்களைப் பெருமைப்பட வைத்தது? அதை பிரபஞ்ச அழகியாக எப்படி பயன்படுத்துவீர்கள்?” என்ற கேள்வி டெமியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, “ஒரு பிரபஞ்ச அழகியாக முதலில் நீங்கள் உங்கள் தனித்துவத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்கள் பயங்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார். மேலும், பெண்கள் குறித்தான கேள்விக்கு, “சில இடங்களில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் உழைத்தும் அவர்களுக்கான ஊதியம் அளிக்கப்படுவதில்லை.

இது சரி என்று நான் நினைக்கவில்லை. உலகிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும்” என்றார்.

பல்வேறு உலக நாடுகளிலிருந்து 92 பெண்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இரண்டாவது இடம் கொலம்பியாவின் லாரா கோன்செலஸ்க்கும், மூன்றாவது இடம் ஜமைக்காவின் டாவினா பென்னட்டுக்கும் கிடைத்ததுள்ளது.

You might also like More from author