முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்குவது என்றால் விளம்பரம் செய்து, குறைந்த விலைப்புள்ளி கோருபவர்களுக்கு, அதிலும் சந்தை நிலவரத்திற்கு குறைவான விலை கோரும் நபரை கொள்முதல் செய்ய இ-டெண்டர் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் இந்த 2 ஆண்டு காலமாக பொருட்கள் வாங்குவதாக இருந்தால் சந்தை நிலவரத்தைவிட கூடுதலான விலைக்கு வாங்குவதாக தெரிகிறது. இதனால் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

உதாரணமாக ஊராட்சிகளுக்கு தேவையான எல்.இ.டி. பல்பு சந்தை மதிப்பு குறைந்தபட்ச விலை ரூ.1,450-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.2,125 வரை கிடைக்கிறது. ஆனால் அரசின் கொள்முதல் விலை ரூ.3,795-ல் இருந்து ரூ.4,125 வரை மாவட்டத்திற்கு மாவட்டம் விலை நிர்ணயம் செய்து ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.403 கோடி கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக இந்த ஒப்பந்த முறையை பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.

அதுபோல் பேனர், குப்பை பிரிக்கும் செட், தூய்மைக் காவலர்களுக்கான சீருடைகள் மற்றும் பயன்படுத்தும் உபகரணங்கள், ஆடு, மாடுகளுக்கான செட் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் வாங்குவதற்கு இ-டெண்டர் முறை கடைப்பிடிக்கப்படாமல் மிகப்பெரிய முறைகேடு நடந்து வருகிறது. மேலும் கூடுதல் இயக்குநர் முதல் ஒன்றியப் பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு வழங்குவது கிடையாது. பணியிட மாறுதல் விண்ணப்பங்களும் வெளிப்படையாக வழங்கப்படாமல் முறைகேடுகள் நடந்து வருகின்றன. பல நேர்மையான அதிகாரிகள் தொலைதூரத்திற்கு மாறுதல் செய்யப்படுகின்றனர். இத்தனை முறைகேடுகளும் இத்துறையில் பணிபுரியும் இயக்குநர் கா.பாஸ்கரன் உத்தரவின் பெயரிலேயே நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நிதி இழப்பீட்டிற்கும், முறைகேட்டிற்கும் இத்துறையின் தலைவர் என்ற முறையில் இயக்குநர் கா.பாஸ்கரன் மீது விசாரணைக்குழு அமைத்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் எனவும், விசாரணையைத் துவக்கும் முன்பு அந்தப் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் எனவும், தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

You might also like More from author