ராஜஸ்தானில், காதலர்களை நிர்வாணாமாக்கி அவர்கள் மீது தாக்குதல்

ராஜஸ்தானில், காதலர்களை நிர்வாணாமாக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ளது ஷம்பூபுரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பில் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த கன்ஜுரா (20) என்பவர் 18 வயதுடைய அவரது உறவுக்காரப் பெண்ணை காதலித்துள்ளார். இது, பெற்றோருக்கு பிடிக்காததால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி குஜராத்தில் வசித்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவர்களை தேடிக் கண்டுபிடித்த உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

பின்னர் இருவரையும் அடித்து சித்ரவதை செய்து, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அதை, அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல், 16) நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய வீடியோவை நேற்று முன்தினம் (ஏப்ரல், 18) போலீஸார் பார்த்துள்ளனர்.

இதையடுத்து, அந்த கிராமத்துக்குச் சென்ற போலீஸார் பாதிக்கப்பட்ட இளைஞரை அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார், ‘மற்றவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக கிராமத்து பஞ்சாயத்தினர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தையும் எச்சரித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பிவைப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

You might also like More from author