லஞ்சம் கொடுத்தேனா? டி.டி.வி.தினகரன் பரபர பேட்டி!

‘டெல்லியில் கைதானவர்கள் யார் என்றே தெரியாது’ என்று மறுப்பு தெரிவித்துள்ள அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்கத் தயார்’ என்று கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தலைமையில் கட்சி உருவாகியுள்ளது. இதனிடையே, சசிகலா, பன்னீர்செல்வம் அணியினர் இரட்டை இலைச் சின்னம், கட்சிப் பெயருக்கு போட்டிப்போட்டதால் இரண்டையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே, சின்னத்தை பெற்றுத்தர டி.டி.வி.தினகரன் 30 லட்சம் ரூபாய் கொடுத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், “இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நான் சுரேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவிலலை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. குற்றச்சாட்டின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தெரியவில்லை. கட்சியை அழிப்பதற்காக இதுபோன்ற தவல்கள் பரப்பப்படுகின்றன. கட்சியை அழிக்கும் நோக்கத்துடன் யாரோ திட்டம் போடுகிறார்கள். டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்க தயாராகவே இருக்கிறேன். காவல்துறை தரப்பில் யாரும் என்னிடம் பேசவில்லை.

சசிகலாவை சந்திக்க இன்று பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ளேன். கட்சியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கும்படி அமைச்சர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை. வருமான வரித்துறையினர் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை மூன்று அமைச்சர்களும் சட்டப்படி சந்திப்பார்கள். கட்சியில் எந்தவித நெருக்கடியும் கிடையாது” என்று கூறினார்.

You might also like More from author