வட தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும்: வானிலை மைய அதிகாரிகள் தகவல்

சென்னை:

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக காஞ்சீபுரம், நீடாமங்கலம், மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆந்திராவின் தெற்கு பகுதி முதல் தமிழகத்தின் வடக்கு பகுதி வரை மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தின் வடக்கு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

காஞ்சீபுரம், நீடாமங்கலம், மரக்காணம் தலா 4 செ.மீ, பூந்தமல்லி, மைலம், குமாரபாளையம், எண்ணூர், வல்லம், பள்ளிப்பட்டு தலா 3 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், செங்கம், மன்னார்குடி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், தளி, குடவாசல், ஆலங்குடி, வானூர், சாத்தனூர் அணைக்கட்டு, மாமல்லபுரம், திருச்சி, மணப்பாறை, பொன்னேரி, அருப்புக்கோட்டை தலா 2 செ.மீ., ஏலகிரி, திருச்சுழி, பெரியநாயக்கன்பாளையம், நாமக்கல், செம்பரம்பாக்கம், விழுப்புரம், சோளிங்கர், அஞ்சட்டி, புதுக்கோட்டை, விராலிமலை, காவேரிப்பாக்கம், காட்டுக்குப்பம், ஆர்.கே.பேட்டை, தாம்பரம், கடலூர், சூலகிரி, வாணியம்பாடி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com