விவசாயிகளை பாதிக்கும் கெயில் எரிவாயு திட்டத்தை ஏற்க முடியாது: வைகோ அறிவிப்பு

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2013 மார்ச் மாதம் கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால், கெயில் நிறுவனம் உயர்நீதிமன்றம் சென்று தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை ஆணை பெற்றது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2013 நவம்பர் மாதம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 2016 இல் பிப்ரவரி 2 இல் இறுதித் தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று கூறிய உச்சநீதிமன்றம், எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் திட்டத்தைத் தொடரலாம் என்றும், மத்திய அரசின் திட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மறு சீராய்வு மனுதாக்கல் செய்து இன்னும் இவ்வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

பெட்ரோலிய அமைச்சகம், கெயில் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து விவசாயிகளின் அச்சத்தைப் போக்கி ஒரு ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

கொச்சி-பெங்களூரு, குஜராத் அகமதாபாத் காந்தி நகர் போன்ற திட்டங்களில் நெடுஞ்சாலை வழியாகவே எரிவாயு கொண்டு செல்கின்றபோது, தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மீண்டும் மீண்டும் உத்தரவு போடுவதை ஏற்க முடியாது.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒருபோதும் துணை போகக்கூடாது; கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You might also like More from author