10 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு மாதத்தில் 32 சதவீதம் மழை

சென்னை:

தமிழகத்தில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் கடந்த 4 நாட்களாக விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரி பகுதியிலும் நேற்று கனமழை பெய்ததால் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் பொதுவாக ஆகஸ்டு மாதத்தில் அதிக மழை தமிழகத்துக்கு கிடைக்காது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 32 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளதாக வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை காலகட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை கிடைக்கும்.

ஆனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அந்த அளவுக்கு மழை கிடைக்காது. ஆனால் இப்போது தமிழகம்-புதுவையில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு மாதத்தில் 32 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர வழிவகை ஏற்பட்டுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு 151 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. 2009-ம் ஆண்டு 98 மி.மீட்டர் மழையும், 2012-ம் ஆண்டு 86 மி.மீட்டர் மழையும், 2015-ல் 81.6 மி. மீட்டர் மழையும் பெய்துள்ளது.

கடந்த ஆண்டு 55.1 மி.மீட்டர் மழை பெய்தது. ஆனால் இப்போது 114.1 மி.மீட்டர் வரை மழை கிடைத்துள்ளது.

இப்போது பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகம் வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் குடிநீர் ஏரிகளுக்கும் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப் பாடு குறைய ஓரளவு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like More from author