1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் கிராம புறங்களில் வாழ்கின்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தினை ஆரம்பித்து அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தொழில் ரீதியாகப் பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2011 மே முதல் 2017 மார்ச் வரை 18 வயது முதல் 60 வயது வரையுள்ள மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கொண்டு புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு 6 ஆயிரத்து 140 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 6 கோடியே 52 இலட்சம் தொகையினை சேமிப்பாக வைத்துள்ளனர்.
கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ஆதார நிதி வழங்குதல் தொடர்பாக ஊராட்சி துவக்க நிதியாக ரூபாய் 55 ஆயிரம் வீதம் 404 ஊராட்சிகளுக்கு ரூபாய் 2 கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம வறுமை ஒழிப்புச் சங்க துவக்க நிதியாக ரூபாய் 50 ஆயிரம் வீதம் 407 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
சமுதாய முதலீட்டு நிதி தொடர்பாக கிராம வறுமை ஒழிப்புச் சங்க சமுதாய முதலீட்டு நிதி முதற்கட்ட ஒன்றியங்களுக்கு ரூபாய் 16 இலட்சம் வீதம் 135 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 21 கோடியே 60 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஒன்றியங்களில் 38 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 5 இலட்சம் வீதம் ரூபாய் 1 கோடியே 90 இலட்சமும் மற்றும் 99 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 5 ஆயிரம் வீதம் ரூபாய் 2 கோடியே 47 இரட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
271 ஊராட்சி குழு கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூபாய் 1 இலட்சம் வீதம் ரூபாய் 2 கோடியே 71 இலட்சம் கடனுதவியும், 32 ஊராட்சி குழு கூட்டமைப்புகளுக்கு பெருங்கடனாக ரூபாய் 8 கோடியே 48 இலட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 26ஆயிரத்து 144 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் மூலம் ரூபாய் 7 கோடியே 62 இலட்சம் நேரடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
321 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 16 இலட்சம் செலவில் சோலார், குந்தன், ஜூவல்லரி மற்றும அடுமனை தொழிற்முனைவோர் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. 1819 உறுப்பினர்களுக்கு தையல், சமையல், அடுமனை, சிறுதானிய உணவு, எலக்ட்ரீசியன் போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களின் நிதி சார்ந்த அறிக்கையினை பதிவேற்றம் செய்து கண்காணிக்கும் பொருட்டு 698 சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு அம்மா கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் 15 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 4 ஆயிரத்து 150 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஊராட்சியில் ஒரே தொழில் செய்யக்கூடிய 15 முதல் 20 நபர்களை குழுவாகக் கொண்டு 147 ஒத்த தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு 17 குழுக்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மூன்று விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய 35 கல்லூரி சந்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சி அளவில் ஒரு விற்பனை அங்காடிக்கு ரூபாய் 3 இலட்சத்து 10 ஆயிரம் செலவில், 3 விற்பனை அங்காடிகள் ரூபாய் 9 இலட்சத்து 30 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு விற்பனை அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் வட்டார அளவில் ரூபாய் 3 இலட்சத்து 10 ஆயிரம் வீதம் 5 வட்டாரங்களில் ரூபாய் 15 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வளர்இளம் பெண்களுக்கு பரிட்சார்த்த முறையில் இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நாப்கின் வழங்குவதற்கு ஒரு வெண்டிங் மெ~pன் அமைப்பதற்கு ரூபாய் 19 ஆயிரத்து 940 வீதம் 100 வெண்டிங் மெ~pன்கள் ரூபாய் 19 இலட்சத்து 94 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாப்கினை பயன்படுத்திய பின்பு சுகாதார முறையில் அழிப்பதற்கு சூளை அமைப்பதற்கு தலா 5 ஆயிரத்து 950 வீதம் 100 சூளைகள் ரூபாய் 5 இலட்சத்து 95 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 271 கால்நடைகள்(பசு, கன்றுகள், காளைகள்) 14 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 237 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்(மகளிர் திட்டம்) 2011 மே முதல் 2017 மார்ச் வரை 27 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு மொத்தம் ரூபாய் 1183 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You might also like More from author