Home தமிழகம் 33 சதவீதம் இடஒதுக்கீடு: 2 லட்சம் கையெழுத்துடன் படிவத்தை மோடியிடம் ஒப்படைக்கும் மகளிர் காங்கிரஸ்

33 சதவீதம் இடஒதுக்கீடு: 2 லட்சம் கையெழுத்துடன் படிவத்தை மோடியிடம் ஒப்படைக்கும் மகளிர் காங்கிரஸ்

15

 

பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 23-ந்தேதி கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தொடங்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

இந்த கையெழுத்து பிரதிகள் சேகரிப்பு மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. மாநில தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, கோவை கவிதா, சேலம் சாரதா, சுமதி அன்பரசு, ஆலிஸ் மனோகரி, மானசா பாத்திமா, சாந்தி ஜோசப் உள்பட அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட வாரியாக கையெழுத்து படிவங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த படிவங்களை வருகிற 19-ந்தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அகில இந்திய தலைவி ஷோபா தலைமையில் அனைத்து மாநில தலைவிகளும் ஒப்படைக்க இருப்பதாக ஜான்சிராணி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* குஜராத்தில் சாதரணமாக நடந்திருக்க வேண்டிய மேல்-சபை தேர்தலை ஜனநாயகத்துக்கு புறம்பான வழிகளை கையாண்டு பா.ஜனதா அவமானப்பட்டிருக்கிறது. இந்த செயலுக்கு அக்கட்சியை கண்டிப்பதோடு அகமது படேல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

*சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படுவதை கைவிட வேண்டும்.

*தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் ரேசன் பொருட்கள் விநியோகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.