Apr 8, 2017
16 Views
0 0

கம்பீர், லின் அதிரடி சாதனை, குஜராத்தை மூழ்கடித்தது கொல்கத்தா

Written by
banner

குஜராத் லயன்ஸ் நிர்ணயித்த 184 ரன்கள் இலக்கை ஒரு விக்கெட் கூட இழக்காமல் விரட்டி 184/0 என்று கொல்கத்தா அணி வெற்றி பெற்று டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது

ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் நேற்று டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் ரெய்னா தலைமை குஜராத் லயன்ஸ் அணியை முதலில் களமிறக்கியது, அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. மெக்கல்லம் 35 ரன்களை எடுக்க ரெய்னா (68), தினேஷ் கார்த்திக் (47) கூட்டணி ஸ்கோரை 183 ஆக உயர்த்தினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் லின், கம்பீர் ஆகியோர் குஜராத் அணியின் படுமோசமான பந்து வீச்சை சகல திசைகளிலும் விரட்டினர், குறிப்பாக லின் 41 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 93 நாட் அவுட், கேப்டன் கம்பீர் 48 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை விக்கெட் இழக்காமல் துரத்திய வகையில் இது புதுசாதனையாகும். வெற்றி 14.5 ஓவர்களில் எட்டப்பட்டது.

லின்னைத் தொடக்கத்தில் களமிறக்கி கம்பீர் படுத்துவார் என்று குஜராத் நினைக்கவில்லை. வேகப்பந்து வீச்சை புரட்டி எடுத்தார். இவர்களை ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் விளாசினார். பிக்பாஷ் லீக் போட்டியில் லின் 4 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடிப்பவர் என்ற பெயர் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

லின்னுக்கு குட் லெந்தில் வீசக்கூடாது என்று ஒருவேளை அடுத்த போட்டியில் விளையாடும் போது புரியலாம், ஆனால் நேற்று தவல் குல்கர்னி, மன்ப்ரீத் கோனி ஆகியோர் அதே லெந்தில் வீசி லின்னுக்கு விருந்து படைத்தனர். பவர் பிளே, அதாவது 6 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 73.

கம்பீர் முதலில் வேகமாக ஆடினார். கவுஷிக் என்ற விசித்திர ஆக்‌ஷனுடன் வீசும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரை கம்பீர் வெளுத்து வாங்கினார் ஒரே ஓவரில் 16 ரன்கள் வந்தது. இவரது விசித்திர ஆக்சனால் அவரால் கட்டுக்கோப்புடன் வீச முடியவில்லை. 13 பந்துகளில் இவரை 23 ரன்கள் அடித்தார் கம்பீர். பிறகு தனது 32-வது ஐபிஎல் அரைசதத்தை எடுத்தார், இன்னும் இரண்டு அரைசதங்கள் எடுத்தால் டேவிட் வார்னரை சமன் செய்வார்.

தவல் குல்கர்னி 2.5 ஓவர்களில் 42 ரன்கள் விளாசப்பட்டது. மன்பிரித் கோனி 2 ஓவர்களில் 32 ரன்களையும் கவுஷிக் 4 ஓவர்களில் 40 ரன்களையும் ஷதப் ஜகதி 3 ஓவர்களில் 30 ரன்களும் என்று விட்டுக் கொடுத்தனர். டிவைன் ஸ்மித் 1 ஓவரில் 23 ரன்கள் இவரை கிறிஸ் லின் கால்ஃப் வீரர் அடிப்பது போல் அடித்தார்.

இந்த அணியின் நட்சத்திர வீரர்களான பிராவோ, ஜடேஜா இல்லாதது பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது, ஜேம்ஸ் பாக்னரை சேர்த்திருக்கலாம், ஆண்ட்ரூ டை என்பவரை சேர்த்திருக்கலாம். ஆனால் அணித்தேர்வு இப்படியாக ஆட்டம் லின் கையில் சிக்கி சின்னாபின்னமாகியது.

முன்னதாக குஜராத் லயன்ஸ் அணியில் மெக்கல்லம் அதிரடியாக 35 ரன்களை எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.ஆனார். அபாய வீரர் ஜேசன் ராய் 14 ரன்களில் சாவலவிடம் வீழ்ந்தார்.

ரெய்னாவுக்கு 2 கேட்ச்கள் கோட்டை விடப்பட்டதால் 51 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் தனது அருமையான பார்மை மீண்டும் நிறுவினார் அவர் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் 183-ஐ எட்டியது. கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். போல்ட் 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்தார். சுனில் நரைன் 4 ஓவர்களில் 33 ரன்கள் என்று சோபிக்கவில்லை. யூசுப் பத்தான் ஒரு ஓவரில் 15 ரன்கள் கொடுத்தார்.

இவ்வளவு ரன்கள் எடுத்தும் கம்பீர் (76) லின் (93) குஜராத்தை மூழ்கடித்தனர்.

Article Categories:
விளையாட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *