திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்  போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு இந்து மக்கள் கட்சி நிர்வாகி குற்றச்சாட்டு

திருவண்ணாமலை, ஏப்.18: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் தி.மலை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் இர.விஜயராஜ் தலைமையில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜேஷ், அசோக்குமார், ஆகியோர் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில் திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அவசர மற்றும் ஆபத்து காலங்களில் இந்த அரசு மருத்துவமனை பயன்பட உள்ளது. ஆனால் அடிப்படை வசதி இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனை உள்ளது.
போதிய மருத்துவர்கள் இல்லாததால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த 13ந் தேதி ஜெயசித்ரா என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவசர சிகிச்சை மற்றும் ஐசியு வார்டு மூத்த மருத்துவர் இல்லாத காரணத்தால் 4 மணிநேரம் காலம் கடந்து சிகிச்சை பெற்றதால் உயிரிழப்பு நேர்ந்தது.
ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கவனிக்க டாக்டர் இல்லை என சொல்லி பல மணிநேரம் காக்க வைக்கின்றார்கள். இதனால் சமீப காலமாக பல உயிரிழப்பு நேர்ந்துள்ளது. மேலும் ஆய்வக உதவியாளர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் பிரிவுகளிலும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது எனவே ஏழை எளிய மக்களின் உயிரிகாக்கும் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

You might also like More from author