ஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு -மத்திய அரசு!

Extension of Aadhaar link

பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பான் கார்டு, வங்கி கணக்கு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட், இன்சூரன்ஸ் பாலிசிகள், தபால் நிலைய திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பத்திரங்களுடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தர விட்டது.

சமையல் எரிவாயு, ரேஷன் உள்ளிட்ட மானியங்கள் பெற ஆதார் எண் இணைப்பிற்கு 2018 மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் “மொத்தம் 139 சேவைகள் மற்றும் திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கை வெளியிடும். எனினும் மொபைல் எண்ணுடன் ஆதாரை, 2018 பிப்ரவரி 6ம் தேதிக்கு முன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை. இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்கு காலக்கெடு 2018ம் மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும்” எனக்கூறினார்.

இதனிடையே, பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

You might also like More from author