காஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு திருச்சியில் விழிப்புணர்வு முகாம்

how to use gas Awareness Camp in Tiruchirapalli

காஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 51 ஊராட்சிகள் உள்பட நாடு முழுவதும் 15,108 ஊராட்சிகளில் ‘உஜ்வாலா திவாஸ்’ முகாம் நடைபெற உள்ளதாக எச்.பி.சி.எல் தென்மண்டல பொதுமேலாளர் தெரிவித்தார்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) தென் மண்டல காஸ் (எல்பிஜி) பொதுமேலாளர் அம்பபவானி குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக புகையில்லா கிராமங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் 20ம் தேதி ‘உஜ்வாலா திவாஸ்’ தினமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் காஸ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த உள்ளது.

தற்போது நாடுமுழுவதும் உள்ள காஸ் இணைப்புகளை, 2020க்குள் 8 கோடி இணைப்புகளாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு, ஆரோக்கியம் கருதி காஸ் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு, 2011 கணக்கெடுப்பின் படி இலவச காஸ் இணைப்பு மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 1 கோடி இலவச காஸ் இணைப்புகளும், தமிழகத்தில் 2.5 லட்சம் இணைப்புகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.எல்பிஜி காஸ் பயன்பாடு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு ‘உஜ்வாலா திவாஸ்’ என்ற காஸ் விழிப்புணர்வு முகாமை 20ம் தேதி நடத்த உள்ளது.நாடு முழுவதும் 15,108 ஊராட்சிகளில் இம்முகாம் நடக்கிறது. இதில் பாதுகாப்பு, ஆரோக்கியம், பொருளாதார சிக்கனம், சுற்றுப்புறச்சூழல், ஆற்றல் மேம்பாடு ஆகிய 5 முக்கிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

திருச்சி மாவட்டத்தில் 51 ஊராட்சிகளில் இம்முகாம் நடக்கிறது. காஸ் நுகர்வு குறித்து அடிப்படை தகவல்கள், தவறான தகவல்கள், பயன்கள் பற்றி விளக்கப்படும். இலவச காஸ் இணைப்பு விண்ணப்பங்கள் வழங்குவது, தகுதியான நபர்களை தேர்வு செய்வது ஆகிய பணி நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சியிலும் 500 பெண்கள் கலந்து கொள்ளலாம். 100 பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் புதிதாக 10,000 காஸ் விநியோ கஸ்தர்களும், தமிழகத்தில் 300 விநியோகஸ்தர்களும் நியமிக்க உள்ளனர். திருச்சியில் 10 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author