ஊட்டியில் அன்புசெழியனை பிடிக்க போலீஸ் வேட்டை!

police-searching-anbu-chezhian-hide-in-ooty

சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கட்டியும் கடன் தீராததால் கந்து வட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் அன்பு செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அன்புசெழியன் தலைமறைவாகி விட்டார்.

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் அன்பு செழியன் பெங்களூரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று தேடினர்.

அவர் அங்கு இல்லை. பெங்களூரில் இருந்து மைசூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதிகளுக்கு வந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அதன்படி கூடலூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வனப் பகுதிகளில் உள்ள குடில்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் மசினகுடியை அடுத்துள்ள கல்லட்டி பகுதியில் உள்ள தனியார் தங்கும் சொகுசு விடுதி, ஊட்டி லவ்டேல், பெர்ன்ஹில், கேத்தி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) 2- வது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது போலீசார் தங்கள் செல்போன்களில் வைத்துள்ள அன்பு செழியன் புகைப்படத்தை காண்பித்து ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் வாகன சோதைனையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like More from author