இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்:இந்தியாவிற்கு 208 ரன்கள் இலக்கு!

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹர்திக் பாண்டியாவின் (93) உதவியால் 209 ரன்கள் சேர்த்தது இந்தியா.

முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. ரபாடா 2 ரன்களுடனும், ஹசிம் அம்லா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரபாடா, அம்லா பேட்டிங்கை தொடங்கினார்கள். இந்தியாவின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அம்லா 4 ரன்களிலேயே மொகமது சமி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். ரபாடா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ் ரன்ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் டி காக் (8), பிலாண்டர் (0), மகாராஜ் (15), மோர்கல் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா திணறியது. கடைசி விக்கெட்டாக டி வில்லியர்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 130 ரன்னில் சுருண்டது.

கண்மூடி விழிப்பதற்குள் தென்அப்பிரிக்காவின் 2-வது இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது. இன்றைய ஆட்டத்தில் 65 ரன்னுக்குள் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. 2-வது இன்னிங்சில் பும்ரா, மொகமது ஷமி தலா 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் தென்ஆப்பிரிக்கா 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

You might also like More from author