சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று
தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு
தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல
திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் மிகவும் முக்கியமானது சித்திரை
திருவிழா. சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 8ஆம் தேதி காலை 7.30 மணிக்கு
மேச லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. இத்திருவிழாவின் முதல் நாள் முதல் இரவு
7 மணிக்கு அம்மன் கேடயத்தில் திருவீதி உலா கண்டருளி மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு பல்லக்கிலும், மாலை 5
மணிக்கு அபிசேகம் கண்டருளி, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி
வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து தினமும் பல்லக்கு,
பூத வாகனம், அன்னவாகனம், ரிசபவாகனம், யானை வாகனம், சேச வாகனம்,
மரக்குதிரை உள்ளிட்ட வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஒன்பதாம் திருநாளான நேற்று இரவு 8 மணிக்கு உற்சவ அம்மன்
வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம்
சென்றடைந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பத்தாம் நாளான இன்று
நடைபெற்றது. காலை 10.40 மணிக்கு மிதுன லக்கனத்தில் தேர்
வடம்பிடிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு
ஓம்சக்தி என கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து மஞ்சள் நிற
உடையணிந்து வேப்பிலையுடன் பாதயாத்திரையாக வந்து அக்னி சட்டி, பறவை காவடி,
அலகு காவடி எடுத்து மொட்டை அடித்து மேளதாளத்துடன்; ஊர்வலமாக வந்து நேர்த்தி
கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஆங்காங்கே பக்தர்களின் தாகம் பபதணிக்கவும், பசி
தீர்க்கவும் பானகம், நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவின்
பதினோராம் திருநாளான புதன் காலை 10 மணிக்கு அம்மன்
பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில்
புறப்பாடாகி வழிநடை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.
பனிரெண்டாம்
திருநாள் இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. 13ஆம்
திருநாளான ஏப்;ரல் 20ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் குமரதுரை மற்றும்
கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.