தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

students-struggle-continue-on-3rd-day-against-Sterlite_

தூத்துக்குடியில் மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இந்த ஆலையில் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் மறுநாள் (13-ந் தேதி)முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டக்குழு அமைக்கப்பட்டது. பந்தல் அமைக்க போலீசார் அனுமதி தராததால் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மரத்தின் அடியில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 24-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடந்தது.

அன்று மாலை போராட்ட குழு சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகநாதன் மற்றும் சில கட்சியினரும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வ.உ.சி. கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

மேலும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகளும் நேற்று காலை கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டம் இன்று 45-வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர். அவர்கள் அங்கு மொத்தமாக சமையல் செய்து சாப்பிடுகின்றனர்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இன்று கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் நேற்று போராட்டம் நடந்த காமராஜ் கல்லூரி மற்றும் கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ. முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

You might also like More from author