அச்சுறுத்திய ‘தித்லி’ புயல் கரையை கடந்தது: 8 பேர் பலி; 3 லட்சம் பேர் வெளியேற்றம்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த தித்லி புயல் இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. புயல் தாக்கிய பகுதியில் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தித்லி புயல் தற்போது ஒடிசாவி லிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 280 கிலோ மீட்டர் தூரத் தில் மையம் கொண்டிருந்தது. இது இன்று ஆந்திர மாநிலத்தை யொட்டி ஒடிசாவின் கோபால்பூர்-கலிங்கப்பட்டினம் இடையே கரை யைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கடலோரத்தில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங் களில் தங்கவைக்கும் பணிகளில் ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். கடலோரத்தில் இருக்கும் கஞ்சம், புரி, குர்டா, கேந்திரபுரா, ஜக்த்சிங்பூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சம பேரும், ஆந்திராவில் சுமார் ஒரு லட்சம் பேரும் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா அருகே, ஒடிசா மாநில எல்லைபகுதியில் இன்று அதிகாலை காலை கரையை கடந்தது. அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன.

இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 30 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆயிரத்து 112 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கஞ்சம் மற்றும் ஜெகத்சிங்பூரில் கர்ப்பமான பெண்கள் 105 பேர் மருத்துவமனையில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளி்ல் 45 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பிரிந்து பணியாற்றி வருகின்றனர். இதனிடை புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.

You might also like More from author