அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் சேர்ந்தால் மகிழ்ச்சி: முதல்வர்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் சேர்ந்தால் மகிழ்ச்சி என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று 18.06.2018 செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைப்பது உறுதி.

காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைவாக கூட்டி தமிழகத்திற்குரிய நீரை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினேன். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவுக்கும் தமிழக அரசு உறுப்பினர்களை அறிவித்துவிட்டது. கேரளம், புதுச்சேரி அரசுகளும் அறிவித்து விட்டன. இன்னும் கர்நாடக அரசு மட்டும் அறிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் வந்தவுடன் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்புவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது” என தெரிவித்தார்.

அப்போது, டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற்று தேர்தலில் நின்று வெற்றி பெறுவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் சேர்ந்தால் மகிழ்ச்சி, பாரட்டுக்குரியது. கட்சியிலிருந்து பிரிந்து சென்று மீண்டும் வருபவர்களுக்கு சட்டப்படி அமைச்சர் பதவி கொடுக்க இயலாது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது எப்படி இடைத்தேர்தல் வரும்?” என தெரிவித்தார்
.

You might also like More from author