அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கு ஜன.,29க்கு ஒத்திவைப்பு

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகி கொண்டார். தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜன.,29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, கடந்த செப்டம்பர் மாதம் அளித்த உத்தரவில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே இந்த வழக்கை விசாரிக்க போதுமானது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. ஆனால், இதனை எதிர்த்து 3 அமைப்புக்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இதனையடுத்து இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அமர்வில், தலைமை நீதிபதி கோகோய், ரமணா, யுயு லலித், பாப்தே, சந்திரசூட், ஆகியோர் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இன்று விசாரணை நடக்காது. விசாரணைக்கான தேதி மற்றும் கால அட்டவணை குறித்து மட்டுமே முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் கூறினர்.
அப்போது ராஜீவ் தவான் என்ற வழக்கறிஞர், அயோத்தி தொடர்பான வழக்கில் கல்யாண் சிங் தொடர்ந்த வழக்கில், அப்போது வழக்கறிஞராக இருந்த லலித்( தற்போது , அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதி) ஆஜரானதை சுட்டி காட்டினார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி லலித் அறிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜன.,29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. புதிய அமர்வு அறிவிக்கப்பட உள்ளது.

You might also like More from author