ஆஹா.. செப்டம்பருக்கும், அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாச்சே.. என்ன நடக்கப் போகுதோ!!

சென்னை: அதிமுகவுக்கும், செப்டம்பர் மாதத்துக்கும் அப்படி என்ன தான் ஏழாம் பொருத்தமோ? அதிமுக என்று சொல்லும் பொழுது, அந்த கட்சியை மட்டும் சொல்லவில்லை. அதன் தலைமையையும் சேர்த்துத் தான் சொல்லுகிறோம். ஆம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாயையும் சேர்த்துத்தான், இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதாவை குறி வைத்துத் தான் சொல்லுகிறோம். கடந்த இரண்டு முறையும் அதிமுக பாதிக்கப்பட்டபோது, அந்த இரண்டு நிகழ்வுகளுமே ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையிலும் பாதித்தது. அதிமுக வையும் பாதித்தது. அந்த இரண்டு சம்பவங்களிலும் அப்போது தமிழ் நாட்டில் ஆளும் கட்சியாக இருந்தது அதிமுக தான். அதனால் அதிமுக அரசாங்கத்தையும் பாதித்தது. தற்போது ஜெயலலிதா காலமான காரணத்தால், அதிமுக என்ற ஆளும் கட்சியையையும், அக் கட்சியின் அரசாங்கத்தையும் கண்டிப்பாக ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப் போகிறது இந்த செப்டம்பரில் வரவிருக்கும் ஒரு தீர்ப்பு.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தமிழக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த அதிமுக வின் 18 எம்எல்ஏ க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள். தங்களது பதவி நீக்கத்தை எதிர்த்து இந்த 18 எம்எல்ஏ க்களும் சென்னை உயர்நீதி மனு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வந்து விடும் என்றே பல தரப்பினராலும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கத்தை ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கத் தான் போகிறது.

செப்டம்பர், 21, 2001 முதல் சம்பவம் 2001 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி நிகழ்ந்தது. 2001 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கியது. அந்தக் கூட்டணியில், அப்போது வலுவுடன் இருந்த ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக), காங்கிரஸ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இருந்தன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று, அஇஅதிமுக 132 இடங்களில் வென்றது. ஜெயலலிதா முதலமைச்சாரானார்.

பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு ஆனால் ஜெயலலிதா அப்போது எம்எல்ஏ வாக இல்லை. காரணம் பிப்ரவரி, 2, 2000 த்தில் சென்னை சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா வுக்கு டான்சி வழக்கு மற்றும் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. ஆனால் சிறைக்குப் போகாமல், ஜெயலலிதா ஜாமீன் வாங்கி விட்டார். ஜெலலிதாவின் மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தது. தண்டனை வழங்கப்பட்ட காரணத்தால், தேர்தல் சட்டங்களின் படி ஜெயலலிதா 2001 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் அந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நான்கு மனுக்களும் நிராகரிக்கப் பட்டன. ஆனால் அஇஅதிமுக வென்றவுடன் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வரானார் ஓ.பி.எஸ் இதனை எதிர்த்து திமுக உச்ச நீதி மன்றத்துக்கு போனது. திமுக மனுவின் முக்கிய வாதம், எம்எல்ஏ வாக போட்டியிட முடியாத ஒருவர் எப்படி முதலமைச்சராக பதவியில் இருக்க முடியும் என்பதுதான். இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு (Congstitution Bench) க்கு போனது. இந்த வழக்கை விசாரித்த, அப்போதய இந்திய தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சா தலைமையிலான அமர்வு ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகிக்க முடியாது. எம்எல்ஏ வாக் தேர்தலில் போட்டியிட முடியாத ஒருவர், முதலமைச்சராக பதவி வகிக்க முடியாது என்று செப்டம்பர் 21, 2001 ல் தீர்ப்பளித்தது. அன்று இரவே ஓ பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் டான்சி மற்றும் பிளஸண்ட் ஸ்டே வழக்கில் மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று கூறி அவரை விடுதலை செய்தது. இதனை தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் வென்று, 2002 ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார்

செப்டம்பர், 27, 2014 இரண்டாவது நிகழ்வு சொத்து குவிப்பு வழக்கில் ஜெய லலிதா வுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது. இந்த தீர்ப்பை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் மைக்கேல் டி குன்ஹா செப்டம்பர், 27, 2014 ல் வழங்கினார். 27 நாட்கள் பெங்களூர் பரப்பனஹாரா சிறையில் இருந்து ஜெயலலிதா அக்டோபர் மாதம் 17 ம் நாள் ஜாமீனில் வந்தார். தண்டனை பெற்றதால் வழக்கம் போல ஜெயலலிதா பதவியிழந்தார். இந்த முறையும் ஓ பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் மேல் முறையீட்டில், கர்நாடக உயர்நீதி மன்றத்தால் குற்றமற்றவர் என்று சொல்லி ஜெயலலிதா விடுதலை பெற்றார். சென்னை ஆர்.கே. சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏ வாகி, முதலமைச்சராகவும் ஆனார்.

தற்போதய நிலைமை ஜெயலலிதா காலமான பிறகு நிகழ்ந்த முக்கிய நிகழ்வு, அஇஅதிமுக வின் 18 எம்எல்ஏ க்கள் பதவியை தமிழக சட்டமன்ற சபாநாயகர் பறித்தது. காரணம் இந்த 18 எம்எல்ஏ க்களும், தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவை செப்டம்பர் 18, 2017 ல் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, தனித்தனியாக கொடுத்த நிகழ்வு தான். இந்த சம்பவம் கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று கூறி, அஇஅதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.ராஜேந்திரன் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார். அதில் இந்த 18 எம்எல்ஏ க்களின் செயல், கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்றும், எனவே அவர்களது எம்எல்ஏ க்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் இந்த 18 பேரையும், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, அவர்களது எம்எல்ஏ க்கள் பதவியை பறித்து விட்டார்.

என்ன நடக்கும் இப்போது இதனை எதிர்த்து இந்த 18 எம்எல்ஏ க்களும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. இது இரட்டை தீர்ப்பாக, (Split verdict) வந்தது. தலைமை நீதிபதி 18 எம்எல்ஏ க்கள் பதவி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி சுந்தர் பதவி பறிப்பு செல்லாது என்று தீர்ப்பு கொடுத்தார். இதனால் வழக்கு மூன்றாவது தனி நீதிபதி சத்தியநாரயணா விடம் அனுப்ப பட்டது. அங்கு நடந்த வாத பிரதிவாதங்களுக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது. இந்த வழக்கில் தான் வெகு விரைவில் அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் எப்படியும் வந்து விடும் என்று பரவலாக விவரம் அறிந்தவர்களால் எதிர்பார்க்கப் படுகிறது. ஆகவே, ஜெயலலிதா மறைந்தாலும், அஇஅதிமுக வுக்கும், செப்படம்பர் மாதத்துக்குமான போராட்டம் ஓய்வதாக தெரியவில்லை. இந்த தீர்ப்பு அது எப்படி போனாலும் கண்டிப்பாக தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்ப போகிறது என்பது மட்டும் உறுதி.

You might also like More from author