‘இந்தியன் 2’வுக்கு முன்பு ‘சபாஷ் நாயுடு’

இந்தியன் 2’வுக்கு முன்பு ‘சபாஷ் நாயுடு’ படத்தை முடிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த படம் ‘தசாவதாரம்’. அதில், பல்ராம் நாயுடு என்ற நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்திருப்பார் கமல்ஹாசன். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த கேரக்டரின் நீட்சியாக, ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன். 

கமல்ஹாசனுடன் இணைந்து பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தன் மகள் ஸ்ருதி ஹாசனைக் காப்பாற்றுவதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

முதலில் இந்தப் படத்தை டி.கே.ராஜீவ் குமார் இயக்குவதாக இருந்தது. ஆனால், ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கமல்ஹாசனே இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் காலில் அடிபட, ஓய்வு, பிக் பாஸ், அரசியல் என அவரும் பிஸியாகி விட்டார். இதனால், ‘சபாஷ் நாயுடு’ அப்படியே நிற்கிறது.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கமல். தற்போது ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் கமல், அதன்பிறகு ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். ஆனால், அதற்கு முன்னதாக ‘சபாஷ் நாயுடு’ படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

You might also like More from author