இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பியார் பிரேமா காதல்’

தமிழில் ஹிட்டான ‘பியார் பிரேமா காதல்’ படம், இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ரைஸா வில்சன் ஹீரோயினாக நடித்தார். ரேகா, ஆனந்த் பாபு, ராம்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவே தன்னுடைய ‘ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ்’ சார்பில் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். யுவன் முதன்முதலாகத் தயாரித்துள்ள படம் இது. அவருடன் இணைந்து கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், கடந்த 10-ம் தேதி ரிலீஸானது. நவீன கால வாழ்க்கையின் ‘லிவிங் டு கெதர்’ பற்றி இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருந்ததால், நிறைய இளைஞர்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது.

இந்தப் படம் ஹிட்டானதால் மகிழ்ந்த யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் இளனுக்கு ஒரு புது காரைப் பரிசாக அளித்தார். இந்நிலையில், இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. சந்தீப் சிங் என்ற தயாரிப்பாளர் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.

இந்த ரீமேக் படத்தை முடித்துவிட்டு, இதே தயாரிப்பாளருக்கு இன்னொரு படமும் இயக்க இருக்கிறார் இளன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் அந்தப் படம் உருவாக இருக்கிறது.

You might also like More from author