உடல்தானம் செய்வது தாய்மைக்கு சமம்- கமல் கவிதை

கமல்ஹாசன் 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு 15-ந் தேதி சென்னை மருத்துவக் கல்லூரியில் தன் உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு தன் பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்புதானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள், உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் வலியுறுத்திருந்தார்.

அவர் உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், “தாயாய் மாற அழகு குறிப்பு…” என்ற தலைப்பில், அவருடைய குரலில் பதிவு செய்த கவிதை வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள்.

தாயாய் மாற அழகு குறிப்பு…

மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

சொர்க்கம் செல்ல… உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

எத்தகைய நியாயம்! ஏது, இதில் லாபம்.

எனக்குப் பின்னால், எலும்பும் தோலும் உறுப்பும் எல்லாம்…

எவருக்கேனும் உயிர் தரும் என்றால்…

அதுவே ஷித்தி; அதுவே மோட்சம் என்றே நம்பும் சொர்க்கவாசி நான்.

மனிததோல் பதினைந்து கஜத்தில், ‘ஏழு ஜோடி செருப்புகள்’ தைத்தால்

அவை அத்தனையும் என்னைச் சொர்க்கம் சேர்க்கும்.

காண இன்பம் தொடர்ந்து காண்போம்; கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்.

காற்றடைத்த பையின் இடத்தில், இன்னொரு உயிரை வாழவிட்டால்…

ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்துவிடலாம்.

மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

சொர்க்கம் செல்ல… உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

எத்தகைய நியாயம். ஏது இதில் லாபம்!

தானம் செய்வது தாய்மை நிகரரே!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகளை தானம் செய்ய இணையதள இணைப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த இணைப்பில் சென்று உடல் தானத்துக்குப் பதிவு செய்த பிறகு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like More from author