உயர்கல்வி படிக்க பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

உயர்கல்வி படிக்க பிளஸ் 1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும், ஜேஇஇ எனப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தான் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் திங்கள்கிழமை முதல் மாணவ, மாணவிகள் பாலித்தீன் பைகளை உபயோகிக்கக் கூடாது என தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை மூலமாக உத்தரவிடப்பட்டிருக்கிறது.

10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது மன அழுத்தத்தைப் போக்குகின்ற வகையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆயிரத்து 200 மதிப்பெண்கள் என்ற முறையை மாற்றி ஒவ்வொரு வகுப்பிலும் தலா 600 மதிப்பெண்களாக பிரித்து தேர்வெழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும். எனினும், வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர்கள் உயர்கல்வியில் சேரலாம். அந்த வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதில், அவர்கள் தோல்வியுற்றால் மீண்டும் தேர்வெழுத வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர் கல்வியில் சேரலாம். வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்படாது. முதல்வரின் ஒப்புதலோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கோட்டையன் அமைச்சர் செங்தெரிவித்தார்.

பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புப் பாடங்கள் நடத்தப்படாமலேயே நேரடியாக பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுவதாக எழுந்த புகார் காரணமாகவும், இரு வகுப்புகளுமே மாணவர்களுக்கு அடிப்படை என்பதாலும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கும் முறை கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் உயர்கல்வி சேர்க்கையும் நடைபெற்றது. இந்நிலையில், இந்த திடீர் மாற்றத்தை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

You might also like More from author