உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் சிகிச்சை: நோயாளிகளின் வாழ்க்கையில் அரசு மருத்துவமனை அலட்சியம்

ஒடிசா மாநிலத்தில் மயூபாஞ்ச் அரசு மருத்துவமனையில் மின்சார வசதியின்றி இருட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டிய அவலம் உள்ளதாக மருத்துவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத் தலைநகரத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக பண்டிட் ரகுநாத் முர்மு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க விருப்பமின்றி வந்தவழியே திரும்பிவிடவே விரும்புகின்றனர்.

காரணம் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்தான் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். இப்பகுதியில் ஏற்படும் கடும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இங்கு பணியாற்றிவரும் டாக்டர்.தாக்கிணா ரஞ்சன் துடு தெரிவிக்கையில், “நான் தினசரி 180-200 நோயாளிகளைப் பார்க்கிறேன், கடுமையான மின்சாரம் நெருக்கடி உள்ளது, நோயாளிகள் வந்தால் மின்சாரம் இருந்தால் ஆச்சு, அல்லது மின்சாரம் இல்லாமலேயே அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

மருத்துவமனையின் இந்நிலைமைக்கு காரணம் மருத்துவமனைக்கு வரும் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஒரு காரணம். இன்னொன்று இப்பகுதி அதிகாரிகள் இப்பிரச்சினையைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. தொடர்ச்சியாக ஒரு ட்ரான்பாரம் கூட இல்லாமல், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இம்மருத்துவமனை உள்ளது.

ஒவ்வொரு நாளும், 200 நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகிறார்கள், சிலர் உயிருக்கு மோசமான நிலையில்கூட இங்கு அவசர சிகிச்சைக்கு வருகிறார்கள், அதேநேரம் வந்தபின் இங்கு மின்சாரம் இல்லையென்று தெரிந்ததும் உயிருக்குப் போராடும் நிலையில் பெறக்கூடிய சிகிச்சையில் அலட்சியம் வேண்டாம் என இம்மருத்துவமனையைவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.

இதனால் எங்களுக்கும் வருத்தமாக உள்ளது. மாறுதல் கிடைத்தால் உடனே வேறு இடத்திற்கு செல்லவே உண்மையில் நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் நோயாளிகளின் நிலையை எண்ணி மின்சக்தி பற்றாக்குறை காரணமாக, மெழுகுவர்ர்த்திகளைப் பயன்படுத்துகிறோம். சிலர் தங்கள் மொபைல் போன்களில் ஒளிரும் விளக்குகளையும் பயன்படுத்தி நோயாளிகளை பரிசோதிக்கிறார்கள். என்றாலும் இதுவும் ஆபத்துதான். எவ்வளவு நாளைக்கு இதை வைத்து ஓட்டமுடியும். மேலதிகாரிகளோ, பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளோ இதை கவனத்தில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை.

இவ்வாறு டாக்டர் ரஞ்சன் தெரிவித்தார்.

எந்த நிலையிலும் சிகிச்சை அளிக்கும் உள்ளவரைதான் இந்த சிகிச்சைகூட. அதன்பிறகு நோயாளிகளின் நிலை? மருத்துவர்கள் வேறு எதைப்பற்றிகூட அலட்சியம் செய்யலாம்… ஆனால் ஓர் உயிர் காப்பாற்றப்பட சில மணிநேரங்களே உள்ள நிலையில் ஒரு சிறிய வெளிச்சத்தைக்கூட அவரது வாழ்வில் உண்டாக்காத அரசாங்கம் வேறு யாருக்காக மின்சாரத்தை தர மறுக்கிறது என அப்பகுதி மக்களின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You might also like More from author