ஏலத்துக்கு வந்த ருச்சி சோயா நிறுவனம்!!

அதானி வில்மார் நிறுவனம் ரூ.6,000 கோடி அளித்து ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க உள்ளது. இதன் மூலம் ருச்சி சோயா நிறுவனத்தை கையகப்படுத்தும் ஏலத்தில் பதஞ்சலி நிறுவனம் விலகுகிறது. அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மார் குழுமமும் இணைந்து கூட்டு நிறுவனமாக சமையல் எண்ணெய் சுத்திரிகரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளன.

தினேஷ் சர்மா தலைமையிலான ருச்சி சோயா ரூ. 9,000 கோடி கடன் சிக்கலில் உள்ளது. சன் ரிச் சமையல் எண்ணெய் மற்றும் நியூட்ரல்சோயா என்கிற பிராண்டுகளில் சோயா பொருட்கள் தயாரிப்பில் உள்ளது. இந்த நிறுவனத்தை கடன் மறு சீரமைப்பு நடவடிக்கை அடிப்படையில் ஏலம் விட தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஏலத்தில் இந்த நிறுவனத்தை கையகப்படுத்த வில்மார் குழுமமும், பதஞ்சலி நிறுவனமும் ஈடுபட்டன. இதில் ரூ.6,000 கோடிக்கு வில்மார் குழுமம் ஏலம் கேட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் ரூ.5,700 கோடி ஏல தொகை குறிப்பிட்டிருந்தது.

இந்த ஏல கேட்பு தொகையின் அடிப்படையில் வில்மார் குழுமத்துக்கு விற்க மறு சீரமைப்புக் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர். பதஞ்சலி நிறுவனம் குறிப்பிட்ட ஏல தொகையைவிட அதிக தொகையினை வில்மார் குழுமம் குறிப்பிட்டிருந்தது.

ருச்சி சோயா ரூ.9,000 கோடி கடனில் உள்ள நிலையில் ரூ.6,000 கோடிக்கு நிறுவனம் விற்பனையாகிறது. இதில் ரூ.4,000 கோடி கடன் குறைப்பதற்காக ஒதுக்கப்படுவதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர். முன்னதாக முதல் கட்ட ஏலத்தில் பதஞ்சலி நிறுவனம் அதிகபட்சமாக ரூ.4,500 கோடி குறிப்பிட்டிருந்தது.

இரண்டாவது கட்ட ஏலத்தில் வில்மார் குழுமம், ருச்சி சோயாவை கையகப்படுத்த அதிகபட்ச ஏல தொகையை குறிப்பிட்டிருந்தது. பதஞ்சலி நிறுவனம் தனது விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியது. ஆனால் அதானி வில்மார் முதலிலேயே அதிக விலை குறிப்பிட்டதால் ஒப்பந்தபடி அந்த நிறுவனத்துக்கு விற்க மறு சீரமைப்புக்குழு முடிவு செய்ததாக கூறினர். பதஞ்சலியைவிட அதிக தொகைக்கு குறிப்பிட்டதன் காரணமாகவும் இந்த விற்பனை சாத்தியமாகியுள்ளது.

திவால் நடவடிக்கைகள் காரணமாக ருச்சி சோயா விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக புஷன் ஸ்டீல், எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனங்களின் ஏலத்தைப்போல அதிக ஏலத் தொகை கேட்பவர்களுக்கு விற்பனை செய்வது என்கிற அடிப்படையில் ஏலம் விடப்பட்டது. சுவிஸ் முறையிலான ஏலம் என்பது ஒருவர் குறிப்பிடும் விலையை விட மற்றொருவர் அதிக விலை குறிப்பிடும் போது, ஏலக் கேட்பு தொகை அதிகரிக்கும் முறையாகும்.

அதானி வில்மார் நிறுவனம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதில் வில்மார் குழுமம் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்தியாவின் அதானி குழுமம் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ருச்சி சோயாவை வாங்குவது இந்தியாவில் மிகப்பெரிய மற்றொரு கையகப்படுத்தலாக வில்மார் குழுமத்துக்கு அமைகிறது. சமீபத்தில் வில்மார் குழுமம் இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனமான ரேணுகா சுகர்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறிப்பிடத் தக்கது.

இந்த ஏலத்தில் வில்மார் குழுமம் ரூ.4,300 கோடி கடனை செலுத்தவும், பங்குகளை மறுசீரமைத்து ரூ.1,714 கோடியை முதலீடாக மேற்கொள்ளவும் குறிப்பிட்டிருந்தது. பதஞ்சலி நிறுவனம் தனது ஏலத்தில் கடனை அளிப்பதற்கு ரூ.4,065 கோடியும், புதிய முதலீடாக ரூ.1,700 கோடியும் குறிப்பிட்டிருந்தது.

இந்த ஏல நடவடிக்கையின்போது கடன் அளித்த வங்கிகள், சட்ட நிறுவனங்கள், ஏலம் கேட்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திவால் மோசடி நீதிமன்ற உத்தரவின்படி, ருச்சி சோயா உள்பட 40 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ருச்சி சோயா நிறுவனத்துக்கு எஸ்பிஐ அதிகபட்சமாக ரூ.1,822 கோடி கடன் வழங்கியுள்ளது. சென்ட்ரல் வங்கி ரூ.824 கோடி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி ரூ. 607 கோடி, டிபிஎஸ் வங்கி ரூ. 242 கோடியும் கடன் வழங்கியுள்ளன.

You might also like More from author