ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரி நீர் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்து தொடர்ந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் திறப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் படிப்படியாக நீர் வரத்து அளவு உயரத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அது சீராக மேலும் அதிகரித்து தற்போது 1 லட்சம் கன அடியை எட்டியுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆறு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை 8-வது நாளாக நீடிக்கிறது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கினால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பும் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

You might also like More from author