காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு: ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

‘சார்’ வேண்டாம்; ராகுல் என அழையுங்கள்: ராகுல் காந்தி பேச்சால் மாணவிகள் உற்சாகம்
பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர் இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது முக்கியம். வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இத்தகைய நிலைமை வருவதற்கு நிறைய தலைவர்கள் இருந்தனர். ஆனால், பிஹாருக்கோ, உத்தரப் பிரதேசத்திற்கோ சென்றால், அங்கு பெண்கள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும்.

பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்களாக பார்க்கப்பட வேண்டும். நான் நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளை கவனிக்கிறேன். அங்கு, போதுமான பெண்கள் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது 33% இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்கள் ஆண்களைவிட ஸ்மார்ட் ஆனவர்கள்” இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்

You might also like More from author