காமராஜர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் அகற்றம்

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் முனையம் 1-ல் ‘எம்.டி.கோரல் ஸ்டார்ஸ்’ என்ற சரக்கு கப்பல் கச்சா எண்ணெய் இறக்கிக்கொண்டிருந்தது.  ஞாயிறு காலை திடீரென கச்சா எண்ணெய் செல்லும் குழாய் உடைந்து, கப்பல் நிறுத்தும் இடத்தில் விழுந்தது. இதையடுத்து உடனடியாக அவசர கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்தி கச்சா எண்ணெய் இறக்குவது நிறுத்தப்பட்டது. குழாய் உடைந்ததால், அந்த குழாயில் இருந்த கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தும் இடத்தின் அருகாமையில் உள்ள கடல் நீரில் கொட்டியது.
முதற்கட்ட விசாரணையில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 2 டன்னுக்கும் குறைவாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.  அவசர மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. கடலோர காவல் படை உள்பட அனைத்து துறைகளும் கடலில் கொட்டிய எண்ணெயை அப்புறப்படுத்துவதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டன. கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு வசதியாகவும் அந்த சரக்கு கப்பலை சுற்றிலும் மிதவை தடுப்புகள் போடப்பட்டது. ஆகாய மார்க்கமாகவும், கடலின் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையிலும் பரவி இருக்கிறது? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
எண்ணெய் உறிஞ்சும் எந்திரம் மற்றும் உறிஞ்சும் அட்டைகள் மூலம் கடலில் கொட்டிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நடைபெற்றது. கச்சா எண்ணெய் முற்றிலும் அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author