‘கில்லி’, ‘துப்பாக்கி’ போல மாஸ் படமாக இருக்கும்: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

விஜய்யை வைத்து நாங்கள் தயாரிக்கும் படம், ‘கில்லி’ அல்லது ‘துப்பாக்கி’ போல மாஸ் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘மெர்சல்’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்திருக்கும் படம், விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ஆகியவற்றால், படத்துக்குப் பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், விஜய்யின் அடுத்த படத்தைப் பற்றியும் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணையப் போவதாகவும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டபோது, “விஜய் சாரை வைத்துப் படம் தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால், ‘கில்லி’ அல்லது ‘துப்பாக்கி’ போல மாஸ் படமாக அது இருக்கும். அவரின் அடுத்த படத்தை நாங்கள் தயாரிப்பதாக பொய்யான விஷயங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சாரை வைத்துப் படம் தயாரிப்பது என்பது எங்கள் கனவு. எப்போதுமே அது எங்கள் விருப்பமாக இருக்கிறது. எனவே, விரைவில் அப்படியொரு விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம், அதற்காகக் காத்திருக்கிறோம். அவருடன் பணியாற்றுவது எங்களுக்குப் பெருமையான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like More from author