குஜராத்தில் பிளாஸ்டிக் தடை; 2,000 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் அழியும் அபாயம்

குஜராத் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதன் காரணமாக 2 ஆயிரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் பேர் வேலையிழப்பர் என்று குஜராத் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் (ஜிபிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களில் பிளாஸ்டிக் உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வேலையிழப்பர் என்று ஜிபிஎம்ஏ தலைவர் அல்பேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இத்தகவலை அவர் வெளியிட்டார்.

பெரும்பாலான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பஞ்சமஹாக் மாவட்டம் ஹலோல் மற்றும் வதோதரா மற்றும் வாக்யோதயா பகுதியில் அமைந்துள்ளன.

வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட் நகர முனிசிபல் கார்ப்பரேஷன்கள் பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவதற்காக பிளாஸ்டிக் மீது தடை விதித்துள்ளன. இங்கு பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கவும், உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் இத்தொழிலை நம்பியுள்ள பெரும்பாலானோர் வேலையிழப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.

50 மைக்ரான்களுக்கு அதிகமான பிளாஸ்டிக் பைகளை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனங்களுக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கலாம் என்று இந்த மூன்று முனிசிபாலிடிகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like More from author