குடும்பத்துடன் சபரிமலைக்கு வந்த ஆந்திரா பெண்: வலுக்கும் போராட்டத்தால், சாமி தரிசனம் செய்யாமல் திரும்பினார்

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க குடும்பத்துடன் வந்த ஆந்திர பெண், பக்தர்களின் தீவிரமான போராட்டத்தின் காரணமாக, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பினார்.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால், நூற்றாண்டுகளாக 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் வரத்தடை இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கோயிலின் பாரம்பரியத்தை மீறியது என்று பக்தர்களும், தந்திரி குடும்பத்தினரும், பந்தளம் அரச குடும்பத்தினரும் கருதினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பாஜக, ஐயப்ப சேவா சங்கம், பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் சார்பில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு சபரிமலை மாண்பைக் காக்க அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், கேரள அரசு மேல்முறையீடு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்நிலையில், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது, வரும் 22-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடைதிறக்கப்படுவதால் பெண்களை அனுமதிக்கக் கேரள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதேசமயம், பெண்கள் யாரும் கோயிலுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிலக்கல், பம்பா, எரிமேலி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் கார்களை சோதனையிட்டு பெண்கள் இருந்தால் திருப்ப காத்திருக்கின்றனர். அந்தவகையில் பக்தர்களுக்கு இடையூறு செய்த 8 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மாலையில் கோயில் நடைதிறக்கப்படும் நேரம் நெருங்கி வரும் நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்தோடு ஐயப்ப பக்தர்களும், போராட்டக்காரர்களும் சாலையின் இரு பகுதிகளிலும் காத்திருக்கிறார்கள். இதனால், மிகுந்த பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஆந்திரமாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து மாதவி என்ற பெண் தனது குடும்பத்தினருடன் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க இன்று காரில் பம்பைக்கு வந்தார். அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் காட்டுப்பாதையில் சன்னிதானத்துக்கு புறப்படத் தயாரானார்.

ஆனால், பம்பையில் இருந்த பக்தர்கள், மாதவியின் குடும்பத்தினரை சன்னிதானத்துக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. சன்னிதானத்துக்குச் செல்லும் பாதையை மறித்து அமர்ந்த பக்தர்கள் மாதவியையும், அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களையும் மலைமீது ஏற அனுமதிக்கவில்லை.

இந்தப் போராட்டம் குறித்து அறிந்த போலீஸார் அங்கு வந்து, மாதவிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பை அளித்து மேலே அழைத்துச் சென்றனர். ஆனால், சில மீட்டர் தூரம் சென்றபின் போராட்டக்காரர்கள் கோஷமும், எதிர்ப்பும் வலுத்து, மாதிவியின் குடும்பத்தினரைப் பக்தர்களும், ஐயப்ப தர்ம சேனாவினரும் சுற்றிவளைத்து கீழே இறங்க வற்புறுத்தினார்கள்.

இதையடுத்து, அச்சமடைந்த மாதவி தனது குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யாமல் பம்பைக்கு திரும்பினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பம்பையில் சாலையில் இருபுறங்களிலும் பக்தர்கள் அமர்ந்து, ஐயப்பனின் மந்திரங்களை உச்சரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக தலைவர் எம்.டி. ரமேஷ் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் மாண்பைக் காக்க வேண்டும். ஐயப்ப பக்தர்களின் உணர்வை மதிக்க மாநில அரசு தவறிவிட்டது என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயராஜன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனம் செய்யாமல் திருப்பி அனுப்பினால், ஐயப்ப தோஷத்துக்கு ஆளாக நேரிடும். பக்தர்களைத் தடுப்பது மக்கள் விரோதம், சட்டத்துக்குப் புறம்பானது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

You might also like More from author