குத்து சண்டை தரவரிசை: மேரி கோம் முதல் இடம்

இந்தியாவின் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் (வயது 36).  மணிப்பூரை சேர்ந்த கோம் 3 குழந்தைகளுக்கு தாயானவர்.
இவர் கடந்த 2001ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வெள்ளி பதக்கம் வென்றார்.  அதற்கு அடுத்து நடந்த 5 சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் தங்க பதக்கம் வென்றார்.  இறுதியாக 2010ம் ஆண்டில் 48 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றார்.
கடந்த 2018ம் வருடத்தில் டெல்லியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோட்டாவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்த பிரிவில் 6வது முறையாக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதனால் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இதேபோன்று 2018ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டி மற்றும் போலந்து நாட்டில் நடந்த சைலேசியன் ஓபன் குத்து சண்டை போட்டிகளில் தங்க பதக்கமும், பல்கேரியாவில் நடந்த ஸ்டிராண்ட்ஜா நினைவு குத்து சண்டை போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்து சண்டை போட்டிக்கான தரவரிசை பட்டியலில், 1,700 புள்ளிகள் பெற்று முதல் இடத்தினை கோம் பிடித்துள்ளார்.  1,100 புள்ளிகளுடன் ஒகோட்டா 2வது இடம் பிடித்து உள்ளார்.

You might also like More from author