குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்; முதல்வர் வேண்டுகோள்

குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க, தமிழக அரசுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப் படுகிறது.

குதூகலமாய் துள்ளித் திரிந்து, பள்ளி சென்று கல்வி பயின்று, அளவில்லா இன்பத்தை அள்ளிப் பருக வேண்டிய பள்ளிப் பருவத்தில், குழந்தைகளைப் பணிக்கு அனுப்புவது மிகக் கொடிய செயலாகும். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகளே. எனவே, அறிவும், வலிமை யும் பொருந்திய தலைமுறையை உருவாக்க, குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிப்பதோடு, அவர்கள் நலனைப் பேணுவதும் நமது தலையாய கடமையாகும்.

குழந்தைத் தொழிலாளர் முறையினைத் தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக அகற்றும் நோக்கில், தமிழக அரசு, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களைச் சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு இலவச சீருடைகள், பாடப் புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்விக் காலம் முழுமைக்கும் ரூ.500 மாதாந்திர உத வித் தொகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தப்படுவதை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட சட்டத் திருத்தத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

‘குழந்தைகள் உழைப்பு நாட்டுக்கு சிறுமை’ என்பதை உணர்ந்து, அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு அழிவில்லாத கல்விச் செல்வம் கிடைக்கச் செய்ய வேண்டும். ‘தொழிலாளர்களாக இல்லாமல், குழந்தைகளைக் குழந்தைகளாகவே வளர்ப்போம்’, ‘குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம்’ என்ற உறுதிகளை அனைவரும் ஏற்று, குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநில மாக தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு மேற்கொள்ளும், முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com