கேப்டனாக இந்த சாதனையை செய்தாவது இங்கிலாந்தை பழி தீர்ப்பாரா கோலி?

லண்டன் : விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக பல சாதனைகளை முறியடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் கூட பல சாதனைகளை தனதாக்கினார். இப்போது இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த வீரர் கிரஹாம் கூச் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் கிரஹாம் கூச். இந்தியா டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி நிகழ்த்தி ஆறுதல் அளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிரஹாம் கூச்சின் சாதனை இங்கிலாந்து கேப்டனாக இருந்த கிரஹாம் கூச் 1990-இல் இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை செய்தார். அந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் 752 ரன்கள் குவித்தார் கிரஹாம். அந்த சாதனையை 28 ஆண்டுகளில் எந்த கேப்டனாலும் முறியடிக்க முடியவில்லை. தென்னாபிரிக்காவின் ஸ்மித் 2003இல் 714 ரன்கள் அடித்து அதை நெருங்கினார்.

சதம் மேல் சதம் அடித்த கிரஹாம் அதே தொடரில் தன் அதிகபட்ச ரன்களான 333 ரன்கள் அடித்து இருந்தார் கிரஹாம். அந்த தொடரில் மூன்று சதம் அடித்து, பேட்டிங் ஆவரேஜ் 125 வைத்து இருந்தார். அதற்கு முன் இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவர்ஸ் 722 ரன்கள் எடுத்து செய்த சாதனையை தான் அப்போது முறியடித்து இருந்தார்.

கோலி தற்போது 544 ரன்கள் இந்திய கேப்டன் கோலி தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 544 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே, இந்திய கேப்டன்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த அசாருதீனின் (426 ரன்கள்) சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்த தொடரில் 2 சதம், 3 அரைசதம் என வலுவாக பேட்டிங் செய்து வருகிறார் கோலி. கிரஹாம் கூச் சாதனையை எட்ட கோலிக்கு இன்னும் 209 ரன்கள் மட்டுமே தேவை.

இங்கிலாந்தை இப்படியாவது பழி தீர்ப்பாரா? இந்தியா, தொடரை இழந்துள்ள நிலையில், கேப்டன் கோலி மீதும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் செய்த சாதனையை முறியடித்தாவது இங்கிலாந்தை பழி தீர்ப்பாரா கோலி?

You might also like More from author