கொடநாடு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் கருத்து

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.
இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற்றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கொடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:-
கொடநாடு கொள்ளை விவகாரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. தற்போது இதனை எதிர்கட்சிகள் மீண்டும் எழுப்புகின்றன பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும். அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாத  எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. கொடநாடு விவகாரம் குறித்து ஆதாரம் இருந்தால் போலீசிடம் வழங்கலாம்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து நல்ல முடிவு  எடுக்கப்படும். தேர்தல் வரும் போது எதுவும் நடக்கலாம் என கூறினார்.

You might also like More from author