சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா; 200 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் என்ன? பிரிட்டிஷ் ஆவணத்தில் புதிய தகவல்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்கள் செல்வது குறித்த சர்ச்சை தற்போது நிலவி வரும் நிலையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை குறித்து அப்போதைய பிரிட்டிஷ் காலத்து ஆவணத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தவறவிடாதீர்

முன்பதிவு செய்த டிக்கெட்டை சொல்லாமல் கேன்சல் செய்த ரயில்வே: ஐஆர்சிடிசிக்கு ரூ.45 ஆயிரம் அபராதம்
இந்தநிலையில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் ஆவணத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தளபதிகளாக இருந்த பீட்டர் அயர் கனோர் மற்றும் பெஞ்சமின் ஸ்வைன் ஆகியோர் 1820-ம் ஆண்டுகாலத்தில் தாங்கள் பணி செய்த திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களில் ஆய்வுகள் செய்து அதனை பதிவு செய்துள்ளனர்.

இதனை மெட்ராஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து கெசட்டியர்களாக அரசு ஆவணமாக இவை பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளது. 1994-ம் ஆண்டு கேரள அரசு இந்த ஆவணத்தை மீண்டும் மறு பிரசுரம் செய்துள்ளது. இதில் சபரிமலை பற்ற கூறப்பட்டுள்ளதாவது:

மேற்குதொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், காட்டு மாடுகள் நடமாடும் பகுதியில் சபரிமலை சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள இந்த கோயிலுக்கு பக்தர்கள் அச்சமின்றி வருகை தருகின்றனர். குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இந்த கோயில் திறந்து இருக்கும். மிகச்சிறிய இந்த கோயில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. முக்கியப்பகுதிகள் செம்பு தகடுகளால் மூடி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

18 கல்படிகளை இங்கு வரும் பக்தர்கள் 18-ம் படி என அழைக்கின்றனர். இந்த சிறிய கோயிலுக்கு பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஜனவரி மாதம் 12-ம் தேதியொட்டி நடைபெறும் ஆண்டு சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அதிகஅளவு பக்தர்கள் வருகிறார்கள். அந்த சமயத்தில் 5 நாட்கள் பக்தர்கள் வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் இங்கு வருகின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி என காணிக்கை செலுத்துகின்றனர். நோய்களில் இருந்து தங்களை காக்க வேண்டும் இந்த வேண்டுதல்களை செய்கின்றனர். ஆனால் இந்த கோயிலுக்கு பருவமடைந்த பெண்கள் யாரும் வருவதில்லை. அவர்களுக்கு இந்த கோயிலில் அனுமதியும் இல்லை. சிறுமியாக இருக்கும்போதோ அல்லது வயதான பெண்களாகவோ இருந்தால் மட்டுமே கோயிலில் அனுமதிக்கின்றனர்.

இவ்வாறு பிரிட்டிஷ் தளபதிகள் எழுதியுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் சசிபூஷண் கூறுகையில் ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்கள் செல்லக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களில் இதுபற்றி விதியாக எதையும் எழுதி வைக்கவில்லை.

எனினும் மக்கள் வழக்கத்தில் இதனை கடுமையாக பின்பற்றி வந்துள்ளனர். பிரிட்டிஷ் ஆவணங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. சில சமயங்களில் குறிப்பிட்ட வயது பெண்கள் கோயிலுக்குள் சென்றிருந்தாலும், அவர்கள் தெரியாமல் அவ்வாறு சென்றுள்ளதாக தெரிகிறது. தடை செய்யப்பட்ட வயது பெண்கள் செல்வது என்பது சபரிமலை வழக்கத்தில் இல்லை’’ எனக் கூறியுள்ளார்.

You might also like More from author