சிக்கிம்மில் முதல் விமான நிலையம்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பெருமிதம்

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை இன்று திறந்து வைத்து, அதை நாட்டுக்குப் பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

இதற்கு முன் இருந்த அரசுகள் மிகவும் மந்தமாக மேம்பாட்டுப்பணிகளைச் செய்த நிலையில், தற்போது பாஜக அரசு வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சி எந்திரமாக மாற்றுகிறது என்று பிரதமர்மோடி தெரிவித்தார்.

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் அமைக்கக் கடந்த 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது, கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தலைநகர் காங்டாக்கில் இருந்து 33 கி.மீ தொலைவிலும், இந்திய-சீனா எல்லையில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் இந்த விமானநிலையம் அமைந்துள்ளது.

கடல்மட்டத்தில் இருந்து 4,500 கி.மீ உயரத்திலும் பாக்யாங் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் 201 ஏக்கர் பரப்பளவிலும் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை இன்று திறந்து வைத்து அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரமதர் மோடி. அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014-ம் ஆண்டுவரை நாட்டில் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின், கடந்த 4 ஆண்டுகளில் 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் முந்தைய ஆட்சியில் திறக்கப்பட்ட நிலையில், தற்போது எங்கள் ஆட்சியில் ஆண்டுக்கு 9 விமானநிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 400 விமானங்கள் இருந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் ஆயிரம் புதிய விமானங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் நாட்டின் வளர்ச்சி எந்திரமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். சுதந்திரம் பெற்றபின் முதல் முறையாக வடகிழக்கு மாநிலங்களோடு ரயில், விமானம், சாலைப்போக்குவரத்தை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறோம்.

சிக்கிம் கிரீன்பீல்ட் விமானம் நிலையம் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளித்து, பொருளாதார செயல்பாடுகளை வேகப்படுத்தும். அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும், பொருளாதார செயல்பாடுகளான ஹோட்டல்கள், தங்குமிடங்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்டவை அதிகமாக உருவாகும்.

முதல்கட்டமாக கொல்கத்தா, கவுகாத்தியில் இருந்து சிக்கிம் மாநிலத்தில்பாக்யாங்குக்கு விமானச் சேவை தொடங்கும். அதன்பின் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடங்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

You might also like More from author