சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி: பங்குச்சந்தைகள் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்ததால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் சில தினங்களாக இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அமெரக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74:46 ஆக சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவு இதுவரை இல்லாத ஒன்று.

இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்றைய வர்த்தக நேர இறுதியில் 34,760 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் ஆயிரம் புள்ளிகள் வரை மளமளவென சரிந்து, 33,723 புள்ளிகளை தொட்டது.

இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 350 புள்ளிகள் வரை சரிந்து 10,155 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.

You might also like More from author