சென்னை வர்த்தக மையத்தில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடக்கம் எடப்பாடி பழனிசாமி, நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னை,

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் கடந்த 2015-ம் ஆண்டு முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசுகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ‘தமிழக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுகிறார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதலீட்டாளர்களை வரவேற்று பேசுகிறார்.

இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்படுகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 2 மணிக்கு முதலீட்டு கருத்தரங்கங்களும், வெளிநாட்டு கருத்தரங்கங்களும் பல்வேறு தலைப்புகளில் கீழ் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு கருத்தரங்கத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் 2-வது மற்றும் நிறைவு நாளான 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதேபோல், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கமும் நடக்க இருக்கிறது.

அன்றைய தினம் மாலை 3 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

முக்கிய நிகழ்வாக தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்த 2 நாள் மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.98 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் ஆங்காங்கே, மாநாடு தொடர்பான விளம்பரங்கள் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கொரியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9, 10-ந் தேதிகளில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடத்தப்பட்டது. ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக மாநாட்டு நிறைவு நாளில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலையில் ரூ.62 ஆயிரத்து 738 கோடி அளவுக்கே முதலீடுகள் வந்துள்ளதாக தெரிகிறது. பல தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தொழில் நிறுவனங்கள் வருகைக்கான கால அளவு 3 முதல் 7 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் அனைத்து முதலீடுகளும் ஈர்க்கப்படும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முந்தைய மாநாட்டின் நிலை இவ்வாறு இருக்கும்போது, 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இப்போது நடத்தப்பட இருக்கிறது. கடந்த மாநாட்டைவிட இந்த மாநாட்டில் ஈர்க்கப்படும் முதலீட்டு தொகையின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. அப்போதுதான், மாநாடும் வெற்றி அடையும் என்பதால், இந்த மாநாட்டில் ரூ.2½ லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டாலும், அவை தொழிற்சாலைகளாக உருவெடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பட்சத்தில் தான், இதுபோன்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் வெற்றி பெற்றதாக கருதமுடியும்.

You might also like More from author