ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கருக்கு விரைவில் சம்மன்

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவர் சிகிச்சை தொடர்பாக முடிவு செய்தவர்கள் பற்றியும் மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த மர்மங்களுக்கு விடை காண்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த விசாரணை கமி‌ஷன் விசாரணையை நடத்தி வருகிறது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் இந்த விசாரணை கமி‌ஷனின் பதவி காலம் நிறைவு பெற உள்ளது. ஆனால் இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவே விசாரணை கமி‌ஷனின் பதவி காலத்தை நீட்டிக்க செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அவர்களது உதவியாளர்கள், ஜெயலலிதாவுக்கு அரசு பணிகளில் உதவியாக இருந்த அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அந்த வாக்குமூலங்களில் மிகுந்த முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சசிகலா உறவினர்களும், டாக்டர்களும் சொல்லும் தகவல்களுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கலாமோ என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கியமாக கருதப்படுபவர் சசிகலாதான். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர் தான் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்தார். ஜெயலலிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தது முதல் அடக்கம் செய்தது வரை அருகில் இருந்தது சசிகலா மட்டுமே.

எனவே சசிகலா சொல்லும் தகவல்கள் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

தற்போது சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு வரவழைத்து விசாரிப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எனவே பெங்களூர் சிறைக்கே சென்று விசாரணை நடத்தலாமா? என்று ஆறுமுகசாமி கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. சசிகலாவிடம் நேரில் விசாரிக்க அனுமதி கிடைக்காத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோல ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் டாக்டர்களிடமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சசிகலாவிடம் விசாரணை நடத்திய பிறகு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

You might also like More from author